மங்கையர்க்கரசியார் அருட்பணி அறக்கட்டளை அடியார்களின் திருவடி பணிந்து வரவேற்கிறது.
திருமுறையே சைவநெறிக் கருவூலம்
திருமுறையே தென் தமிழின் தேன்பாகு ஆகும்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
எழுதியருள் தெய்வநூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
மலர்ந்தருளும் சிறப்புற்றாமால்.
பன்னிரு திருமுறைகள்தான், சைவநெறிக்கு ஓர் கருவூலமாகும். திருமுறைகள்தான், தென்னாட்டின் தேன்பாகு போன்ற இன்பமுடைய தமிழாகும். திருமுறையே, தில்லை அழகிய சிற்றம்பலமுடையான் திருப்பொற்கரம் வருந்த எழுதிய அருள் தெய்வ நூலான திருவாசகமாகும். திருமுறையே, மதுரை சொக்கநாதப்பெருமானே திருவாய் மலர்ந்து அருளிய, ஆலவாய்உடையார் அற்புத திருவந்தாதி என்னும் சிறப்புடையதாகும். சிவபெருமானே திருக்கரங்களால் எழுதியதும், அவரே திருவாயால் மலர்ந்து அருளிய சிறப்பை விட திருமுறைக்கு நிகரான வேறு ஏதாவது பெருமையை எவராலும் பேசிவிட முடியுமா?
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நாயன்மார்கள் பலபேர்களால் பாடப்பெற்ற சைவ சமய பாடல்களின் தொகுப்பே பன்னிரு திருமுறைகள் எனப்படுகிறது. இராஜ இராஜ சோழன் காலத்தில் சிதம்பரம் கோவிலில் கவனிப்பாரற்றுக் கிடந்த ஓலை சுவடிகளில் இருந்து நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பெற்றது இத்திருமுறைகள். உலக மக்களின் பயன்பாட்டுக்காக, சைவ நெறி தழைத்தோங்க, பக்திநெறி எங்கும் பரவ எளிய தமிழில் பன்னிரு திருமுறைகளின் பாடல்கள், மற்றும் பண்ணுடன் கூடிய ஒலி கோப்புகளை இந்த செயலியில் பகிர்ந்துள்ளோம். அனைவரும் இச்செயலியை பயன்படுத்தி திருமுறைகளை படித்து, பாடல்களை கேட்டு அனைத்து பேறுகளையும் அடைய எல்லாம்வல்ல சிவபெருமானின் திருவடித் தாமரைகளை பணிந்து வேண்டுகிறோம். .